வாடகை தாயாக இருக்க 2 பெண்கள் செய்த காரியம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை
சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் மருத்துவக் குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது வாடகைத் தாய்கள் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசியின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது தமிழரசி நேரில் ஆஜரானார். அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தமிழரசி சமர்ப்பித்த ஆவணத்தை சரிபார்த்த போது, கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக போலியான பத்திரிக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு ஒரு குழந்தை தான் உள்ளது என்றும், தாயின் பெயரை மாற்றி பெரியம்மாவின் பெயரை சேர்த்து பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ததையும் மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவக்குழு அதிகாரி இளங்கோவன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி, இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதன்படி, வாடகைத் தாய் செயல்முறையை செயல்படுத்தும் மருத்துவர்கள் வியாபார ரீதியில் செயல்படக் கூடாது. வாடகைத் தாயை ஏற்பாடு செய்வது பொதுநல நோக்கமாக இருக்க வேண்டும்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துப்பூர்வமான சான்றை மாவட்ட மருத்துவக் குழுமத்தில் இருந்து, பெற வேண்டும். வாடகைத் தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
என்னதான் நடைமுறைகள் இருந்தாலும் இடைத்தரகர்கள் ஏழ்மைக் குடும்பத்தில் உள்ள பெண்களை கட்டாயத்தின் பேரில் வாடகைத் தாயாக மாற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், உலக அளவில் வாடகை தாய் அதிகம் இருக்கும் நாடாக இந்தியா உள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?