துணைவேந்தர் நியமனம்.. யுஜிசி புதிய விதிகள்.. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசியர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் துணை வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்த குழு விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மூன்று பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும், அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.
இந்த சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். துணைவேந்தர் நியமனத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் என்ற நிலையில் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தயாரித்தது. அதில், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் தேடுதல் குழுவில் ஆளுநரால் நியமிக்கப்படுபவர் தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அல்லது செனட் அமைப்பு சார்பில் ஒருவர் இடம் பெறுவார். இதோடு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் தேடுதல் குழுவில் இடம் பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம்பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநிலத்தின் பங்கை நிராகரிக்கும் வகையில் பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை அமைந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பல்கலைக்கழக மானியக்குழு (UGC) 07.01.2025 அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான அதிகாரங்கள் முழுவதும் ஆளுநரிடம் இருப்பதாக வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை முற்றிலும் மீறும் ஒன்றாகும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன, அவற்றின் அடிப்படையில் மட்டுமே அரசு எந்தவித முடிவையும் எடுக்க வேண்டும்.
மாநில பல்கலைக்கழகங்களுக்கு அந்த மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பது அத்தியாவசியம். ஆனால், அவர்களை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக பல்கலைக்கழக மானியக்குழு வரைவு அறிக்கை 2025-யில் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகத்திற்கான மாநிலத்தின் பங்கை நிராகரிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பு உள்ளது.
மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லையென்றால், நிர்வாகம் பெரும் குழப்பங்களை சந்திக்கும். பல்கலைக்கழக சட்டங்களுக்கு மாறாக இதுபோன்ற அறிவிப்புகளை செயல்படுத்துவது சட்ட விரோதமானது. பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வரும் முறைமைகளை மாநில அரசுகள் தன் அரசாணைகளின் மூலமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்படியிருக்க, மாநில பல்கலைக்கழகங்களில் மாநில பிரதிநிதிகளை புறக்கணிப்பது நிர்வாகத்தில் கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தும். இச்செயலானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறிப்பதாக உள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு அதனை பல்கலைக்கழக மானியக்குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?