சட்டப்பேரவை வினா-விடை நேரம்.. ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது- அப்பாவு விமர்சனம்

சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது சொந்த ஊரில் சிலை நிறுவ வேண்டும் என அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்தார்.

Jan 9, 2025 - 11:24
 0
சட்டப்பேரவை வினா-விடை நேரம்.. ஆட்சியில் இருக்கும்போது வராத ஞாபகம் தற்போது வந்துள்ளது- அப்பாவு விமர்சனம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று கூடியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

இந்நிலையில், 'அத்திக்கடவு அவினாசி திட்டம் 2 'அதிமுக ஆட்சியில் விடுபட்ட குளங்களுக்கு நீர் நிரப்பக்கூடிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இருப்பினும் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 'அத்திக்கடவு அவினாசி திட்டம் 2'  நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக மட்டுமே முன்னுரிமையின் அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், ‘நந்தன் காழ்வாய்’ திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.  இதனை எப்படியாவது இந்த முறை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். முறைப்படி 'ந கால்வாய் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். ராயபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில், கழிவு நீர் குடிநீர் குழாய்களை சீர்செய்ய வேண்டும்  என உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் தொகுதியில் 546 தெருக்கள் உள்ளன , 13 கழிவு நீர் அகற்றும் நிலையங்கள் உள்ளன. வட சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழைய குடிநீர், கழிவு நீர் குழாய்கள் மாற்றப்பட்டு வருகின்றன. 

அதற்கான பணிகள் வட சென்னை வளர்ச்சித் திட்டம்  946.43 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வட சென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் 2026-க்குள் முடிவு பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா கேளம்பாக்கம் -வண்டலூர் இணைப்பு சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, உறுப்பினர் தெரிவித்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் அதற்கான திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.

நன்னிலம் தொகுதி  வலங்கைமான் புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  நிலம் கையகப்படுத்திய பிறகு அப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டே வலங்கைமான் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.  திருவாரூர் நீடாமங்கலத்தையும் வலங்கைமானையும் இணைக்கும் வகையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆகவே  அப்பகுதியில் மேல்மட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிகப்படியான நான்கு வழி சாலைகள் போடப்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலைதுறை மூலம் 4000 கி.மீ கிராமசாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் புறவழிச்சாலைகள் அமைக்க மத்திய அமைச்சர் நித்தின் கட்கரியிடம் நிதி கேட்க்கப்பட்டு தற்போது பெறப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய பின்பு அங்கும் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.

ராயபுரம் தொகுதியில் கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னைக்கு தற்போது தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டிஎம்சி. ஆனால் தற்போது  15.560 டிஎம்சி குடிநீர் கொள்ளவு உள்ளது. எனவே போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டின் 7-வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. திமுக ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1040 எம்.எல்.டி அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பதில் அளித்தார்

போளூர் புறவழிச்சாலை இந்த ஆண்டு முடிக்கப்படுமா எனவும் வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, போளூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும், பணிகள் முடிந்த உடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைகளை மாநில அரசால் இணைக்க முடியாது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம்  சமீபத்தில் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக, இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

மேலும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கான கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், அதில் 25 சதவீத பணிகள் மட்டுமே மீதமுள்ளது, அந்த பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் தொகுதியில் வீட்டு வசதி வாரியம் மூலம் வணிக வளாகம் கட்டித் தர வேண்டும் என்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, காஞ்சிபுரம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குடியிருப்புகள் 60 இடங்களில் மிக மோசமாக இருந்த நிலையில் அவற்றை இடித்து வீட்டு வசதி வாரியம் மூலம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வீடுகளுக்கான தேவை குறித்து தகவல் வாங்கி அவர்கள் குறிப்பிடும் பகுதியில் வீட்டு வசதி வாரியம் முலம் வீடுகள் கட்டுகிறோம் என்று அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார். மேலும், கடந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம்  கட்டப்பட்ட வீடுகளில் 6,912 வீடுகள் விற்கப்படாமல் இருந்தாகவும், அவற்றில் 2,212 வீடுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த பி.கே. மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி,  அவரது சொந்த ஊரான பாப்பாரப்பட்டியில் திருவுருவச் சிலையும், அங்குள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்தார். அமைச்சர் பதில் சொல்வதற்கு முன்பாக குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ஆட்சியில் இருக்கும் போது வராத ஞாபகம் தற்போது வந்திருப்பதாக கூறினார். தொடர்ந்து பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உறுப்பினரின் கோரிக்கையின் படி வரும் ஆண்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

முதற்கட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு புதிதான RO வசதியோடு கூடிய குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதியதாக வண்ண படங்கள் வரைதலுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5501 அங்கன்வாடி மையங்களில்  எல்இடி டிவி உள்ளிட்ட வசதிகளோடு நவீனப்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

மாநில முழுவதும் 6500 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, அதே போல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியில் இருந்தும் பல வசதிகள் செய்து கொடுத்து வருகின்றனர். தமிழக அரசும் நவீன தொழில்நுட்ப வசதிக்கேற்ப மையங்களை தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow