காதலனுக்காக வெட்டு வாங்கிய சிறுமி.. நடுரோட்டில் வெட்டிய அக்கா கணவர் கைது
சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அயனாவரம் கேஎச் சாலையில் 19ஆம் தேதி மதியம் சிறுமியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான பெண் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
போலீசார் தொடர் விசாரணையில் சிறுமியை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கடந்த ஜூலை மாதம் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதும், அப்போது சிறுமியின் தாய் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக போக்சோ சட்டப் பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சிறுமியின் பாட்டி சூளையில் உள்ள அவரது வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதற்காக சிறுமியின் சகோதரரி கணவரான சந்தோஷ் என்ற தவக்களை (25) என்பவர் சிறுமியையும் அவரது, அப்பாவையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அயனாவரம் கேஎச் சாலை வழியாக சென்றார்.
செல்லும் வழியில் சிறுமியை திருமணம் செய்து கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த மணிகண்டன் சாலையில் வருவதைப் பார்த்து கத்தியால் அவரை தாக்க சந்தோஷ் என்ற தவக்களை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், சிறுமி தனது அக்காவின் கணவரான சந்தோஷை தடுக்க முற்பட, சந்தோஷ் அவரை கத்தியை காட்டி மிரட்டியதும் வெட்ட முற்பட்டதும் அப்போது சிறுமியின் காது மற்றும் கைகளில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அயனாவரம் போலீசார் சிறுமியை கத்தியால் தாக்கிய சந்தோஷ் (எ) தவக்களையை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் (எ) தவக்களை மீது கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் (எ) தவக்களையிடம் அயனாவரம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?