2020ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. பின்னர் 2021ல் ஆட்சியமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அதை ஏற்றுக் கொள்ளாது, புதிய கல்விக் கொள்கையை ஆராய நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 2022ம் ஆண்டு அமைக்கப்பட்ட அக்குழு ஜூலை 1, 2024 ல் 600 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
இதில் 1968 முதல் ஏற்றுக் கொண்ட இருமொழி கொள்கையையும், புதிய கல்விக் கொள்கை புகுத்திய மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்து குழு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது.
இதுதொடர்பாக நெல்லையில் நேற்று (ஆகஸ்ட் 27) சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது.இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. இதனால் நாங்கள் அதை எதிர்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளை கலந்து தான் ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால், புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை, பன்முகத்தன்மையை உதாசீனப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளது. அரசு பள்ளிகளை பலகீனப்படுத்தி, கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.