இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Aug 28, 2024 - 12:41
Aug 29, 2024 - 16:00
 0
இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்

எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தற்போது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 10,000 மீனவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்கு சென்றுள்ளனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு படகை பறிமுதல் செய்ததோடு அந்த படகில் இருந்த 8 மீனவர்களை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்த 8 மீனவர்களையும் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், படகு கடலில் மூழ்கி மாயமான 2 மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், மீட்கப்பட்ட 2 மீனவர்களை ராமேசுவரம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இப்படி தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னதாக நாகை மீனவர்கள், தற்போது ராமேஸ்வரம்  மீனவர்கள் என அடுத்தடுத்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து  24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கச்சத்தீவு. இந்த தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பாகவே இருந்தது. ஆனால் 1974ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்து ஆலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. 

இதன்பிறகு கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்காலம் என்கிற உரிமைகள் இணைக்கப்பட்டு 1976ம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் உருவானது. ஆனால் இதனை இலங்கை அரசு அப்போதிலிருந்து தற்போது வரை அதை கண்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow