புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தங்களது முதல் மாடலான ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூசி1 (QC1) மாடல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆக்டிவா இ (Activa e) இருசக்கர வாகனமானது மாற்றிக்கொள்ள கூடிய பேட்டரிகளை கொண்டது. க்யூசி1 (QC1) மாடல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் நிலையான பேட்டரி அமைப்பை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹோண்டா நிறுவனம் 2050-ஆம் ஆண்டுக்குள், ஜீரோ கார்பன் வெளியேற்றம், அதாவது மாசுபடுத்தாத அளவுக்கு அனைத்து வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. அதில் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் தயாரிப்பு ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
ஆக்டிவா இ (Activa e) எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் சீட்டின் கீழ் 1.5 KWH பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் மாற்றிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தாலே 102 கி.மீ வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட் மற்றும் இகான் ஆகிய மூன்று ரைடிங் மோட் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இருசக்கர வாகனமானது ஐந்து வண்ணங்களில் கிடைக்கின்றன.
க்யூசி1 (QC1) எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 1.5 KWH நிலையான பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை பயணம் செய்யும் வகையில் இந்த இருசக்கர வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனமானது தற்போது வரை இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் விலையை அறிவிக்கவில்லை. இந்த வாகனங்களை ஜனவரி 1-ஆம் தேதி முதல் புக்கிங் செய்யலாம் என்றும் பிப்ரவரி முதல் புக்கிங் செய்யப்பட்ட வாகனங்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?