அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.
உலக மக்களைக் காப்பதற்காக மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்து அதன் மூலம் காத்தும், வாழ்ந்தும் காட்டியுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த அவதாரங்களின் மூலம் தான் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் அனைத்து பொருட்களிலும் நிறைந்து இருக்கிறேன் என்பதை உணர்த்தவும், ஆபத்து காலத்தில் தன்னை உளமார அழைத்தால் அக்கணமே தோன்றி அவர்களை காப்பேன் என்பதை உணர்த்தவும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
சிங்கப்பெருமாள் கோவில் என்னும் இடத்தில் எம்பெருமான் நரசிம்மருக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்களில் ஒருவரான முதலாம் நரசிம்ம மன்னர் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலை கட்டினார். அதுவும் சாதாரனமாக இல்லாமல், மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாக இத்தலத்தை உருவாக்கியுள்ளார். விஜயநகர கால மன்னர்களால் முன் மண்டபங்கள் கட்டப்பட்டதாகத் தொல்லியல் வரலாறு கூறுகிறது. அதன்படி இக்கோயிலில் முன் மண்டபங்கள் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தலம் உள்ள இடம் முன்பொரு காலத்தில் காடுகள் நிறைந்த குன்றாகக் காட்சியளித்ததாகவும், இக்குன்றில் ஜாபாலி என்கிற மகரிஷி நரசிம்ம பெருமாளை நோக்கி தவமிருந்ததாகவும், மகரிஷியின் வேண்டுதலுக்கு இணங்கி பிரதோஷ நேரத்தில் உக்ர நரசிம்மராக நெற்றிக் கண்ணோடு காட்சி அளித்ததாகவும், இதனால் சிவப்பாக மாறிய இக்குன்றுக்கு பாடலாத்ரி (சிவப்பான குன்று) என்று பெயர் வந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. நெற்றிக்கண்ணோடு பெருமாளை தரிசிக்கும்போது ‘கோவிந்தா’ என்று சொல்லி உளமார நினைத்தால் கவலைகள் தீர்வதற்கான வழிகள் நிச்சயமாக பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள மூலவர் சிவந்த மேனியுடனும், நெற்றிக் கண்ணுடனும் காட்சியளிக்கின்றார். இங்குள்ள மூலவரை வலம் வர முடியாது. இதனால் மூலவரோடு மலையை கிரிவலம் வருவது சிறப்பாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தை அறநிலையத்துறையின் அனுமதியோடு உபயதாரர்கள் மூலமாக ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களும் சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு, கருங்கல் தரைதளம் அமைத்து அழகு மிளிர, ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து குரோதி வருடம் கார்த்திகை மாதம் 13-ஆம் தேதி (28.11.2024) வியாழக்கிழமை திரயோதசி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுர் லக்கினத்தில் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திரப்படி மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசணம் செய்தனர்.
What's Your Reaction?