மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை.. திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு
ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவியர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களின் உயர் கல்வி படிப்பை ஊக்குவிக்கும் வகையில் 'முதல்வரின் திறனாய்வுத் தேர்வு’ திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், 500 பேர் மாணவர்களாகவும், 500 பேர் மாணவிகளாகவும் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாதம் ஆயிரம் வீதம் ஒரு கல்வியாண்டில் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இத்தேர்வில் 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் இரு தாள்கள் இருக்கும். முதல் தாளில் கணிதம் தொடர்பாக 60 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும். இரண்டாம் தாளில் சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடத்திலிருந்து 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
வினாக்களை தேர்வு செய்யும் வகையில் நடைபெறும் இத்தேர்வின் முதல் தாளானது காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாவது தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும்.
மாணவர்கள் தேர்விற்கான விண்ணப்ப படிவத்தை dge. tn.gov.in எனும் இணையதளத்தில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாயை சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
What's Your Reaction?