அரசு ஊழியர்கள் சொத்து குறித்த விவரம் தனிப்பட்டது அல்ல.. நீதிமன்றம் திட்டவட்டம்

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Dec 23, 2024 - 15:15
 0
அரசு ஊழியர்கள் சொத்து குறித்த விவரம் தனிப்பட்டது அல்ல.. நீதிமன்றம் திட்டவட்டம்
அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல- நீதிமன்றம் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்டவை எனவும் கூறி, தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு   நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தகவல் உரிமைச் சட்டம் 8-வது பிரிவின் கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும், அரசுப் பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் எனவும், அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை தான் என்ற போதும், அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் முடித்து வைக்க உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow