மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Dec 23, 2024 - 14:00
 0
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசயிகள் போராட்டம்..!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை சந்திப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏல உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும். முல்லை பெரியாறு பாசன பகுதிகளை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் மதுரை மாவட்டம் நாயக்கர்ப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, மாங்குளம், நரசிங்கம்பட்டி, தெற்குதெரு, கல்லம்பட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட 13 கிராம விவசாயிகள் 200 க்கும் மேற்பட்டோர் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் தமிழ்நாடு முழுக்க போராட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம் என கூறினார்கள்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசின் தனித் தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow