சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Aug 9, 2024 - 12:23
 0
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்!
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா வருகின்ற 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டங்களை சீா்குலைக்க சிலர் திட்டமிட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து  சென்னை விமானநிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 9) முதல்  பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு, கடந்த 2 மாதங்களில் 10 முறைகள் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததை அடுத்து, ஏற்கனவே 5 அடுக்கு பாதுகாப்பு முறை போடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் 7 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பு வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் வெளிவட்ட  பகுதியில், சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் இணைந்து ஈடுபட உள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் ஆகியவை கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் செய்யப்படவுள்ளன. 

சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதனை செய்கின்றனர். விமானநிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாா்வையாளா்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களை வரவேற்க வருபவர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் கூடுதலாக ஒரு முறை விமானங்களில் ஏறும் இடத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய்  பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த 7 அடுக்கு பாதுகாப்பு  முறை, வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow