தென்கொரியாவில் விபத்திற்குள்ளான விமானம்.. மீட்பு பணி தீவிரம்
தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று திடீரென விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள் ,6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேருடன் ஜேஜு ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் (Muan) விமான நிலையத்தை நோக்கி பயணித்தது. முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.
மேலும், ஓடு பாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதால் விமானம் விபத்திற்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி காலை 9.03 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 120 பேர் உயிரிழந்ததாகவும், பயணி மற்றும் விமான ஊழியர் என இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் விமானத்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதால் பின்பகுதியில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் மீது பறவை மோதியதால் இந்த கொடூரமான விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜேஜு ஏர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிம் ஈபே (Kim E-bae) உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜேஜூ ஏர் நிறுவனம் முடிந்த உதவிகளை செய்யும் என தெரிவித்துள்ளார். இந்த விமானமானது போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 737-800 ரக விமானம் ஆகும்.
முன்னதாக, கடந்த 25-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு 67 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்திற்கு அருகே வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?