உயிரை பறித்த Eating Challenge.. அதிக அளவு உணவு சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு.. நேரலையில் பரிதாபம்!
இளம்பெண் பான் க்ஸிங்ஓட்டிங், மிகவும் ஆபத்தான முறையில் தொடர்ந்து 10 மணி நேரமாக 10 கிலோவுக்கும் அதிகமான உணவுகளை சாப்பிடும் சவாலில் இறங்கியுள்ளார். இதனை நேரலையிலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பீஜிங்: இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. இத்துடன் அதிவேக இணையதள வசதியும் கிடைப்பதால் எதற்கு எடுத்தாலும் ரீல்ஸ் வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது வழக்கமாகி விட்டது. பயணம் செய்தால் நேரலையில் வீடியோ, மங்களகரமான நிகழ்வுகள் முதல் துக்க நிகழ்வுகள் வரை பங்கேற்றால் நேரலையில் வீடியோ என தங்களது அனைத்து செயல்களையும் வீடியோ எடுப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நாவுக்கு ருசியான விதவிதமான உணவுகளை சமைப்பதை சிலர் நேரலையில் வீடியோ எடுத்து வெளியிடும் நிலையில், சிலர் உணவகங்களுக்கு சென்று உணவின் தரத்தை ருசிபார்த்து வீடியோ எடுத்து போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல் சிலர் eating challenge (உணவு போட்டி) என்ற பெயரில் குறிப்பிட்ட சில நிமிடங்களில் அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அதாவது 5 நிமிடங்களில் 15 புரோட்டாக்களை சாப்பிடுவது, 2 நிமிடங்களில் 15க்கும் மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது என வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படி அதிவேகமாக அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டால் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தும் சிலர் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இந்நிலையில், சில நிமிடங்களில் அதிக அளவிலான உணவு சாப்பிட்ட சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீனாவை சேர்ந்தவர் 24 வயதுடைய இளம்பெண் பான் க்ஸிங்ஓட்டிங். இவர் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு அதனை நேரலையில் ஒளிபரப்பி வந்தார். சில நேரங்களில் eating challenge என்ற பெயரில் குறிப்பிட்ட சில நிமிடங்களில் அதிக அளவிலான உணவுகளை சாப்பிட்டு வந்தார்.
அந்த வகையில் இளம்பெண் பான் க்ஸிங்ஓட்டிங், மிகவும் ஆபத்தான முறையில் தொடர்ந்து 10 மணி நேரமாக 10 கிலோவுக்கும் அதிகமான உணவுகளை சாப்பிடும் சவாலில் இறங்கியுள்ளார். இதனை நேரலையிலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதன்படி அதிக உணவுகளை உட்கொண்ட பான் க்ஸிங்ஓட்டிங் சவாலை தொடங்கிய சில மணி நேரங்களில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் பான் க்ஸிங்ஓட்டிங் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். பான் க்ஸிங்ஓட்டிங் பல மணி நேரம் தொடர்ந்து உணவை சாப்பிட்டதால் அவரது வயிறும் முழுவதும் நிரம்பி உணவு செரிமானமாகாமல் இருந்துள்ளது. இதனால் வயிற்றின் உட்பகுதி கடுமையாக சேதம் அடைந்தும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பான் க்ஸிங்ஓட்டிங் ஏற்கெனவே இதுபோல் அதிக உணவு சாப்பிட்டு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் அவரை பின்தொடர்பவர்கள், 'இனிமேல் இப்படி செய்யாதே' என எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கு செவிமடுக்காததால் பான் க்ஸிங்ஓட்டிங் இப்போது அநியாயமாக உயிரை விட்டுள்ளார்.
What's Your Reaction?






