அமெரிக்காவில் டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி?.. வெளியுறவுத்துறை சொல்வது என்ன?
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை என 3 நாட்கள் அரசுமுறைப் பயணமகா அமெரிக்கா செல்கிறார். இதேபோல் ஐநா பொது அவையில் உரையாற்றும் பிரதமர் மோடி, பல்வேறு இரு தரப்பு சந்திப்புகள் மற்றும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
மேலும் உயர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை (சிஇஓ) சந்தித்து பேசும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் இந்தியா வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றுகிறார். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் தொடர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆகையால் அமெரிக்கா செல்லும் மோடி, டிரம்ப்பையும் சந்தித்து பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தும் வகையில், ’’அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்கிறேன். மோடி ஒரு அற்புதமான மனிதர்’’என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதனால் மோடி-டிரம்ப் சந்திப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘’அமெரிக்கா செல்லும் பிரதமர் ஏராளமான சந்திப்புகளை மேற்கொள்கிறார். இந்த 3 நாட்கள் எத்தனை சந்திப்புகளை அவர் மேற்கொள்ள முடியுமோ, அதை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம்’’என்றார். அதே வேளையில் மோடி-டிரம்ப் சந்திப்பை அவர் உறுதிப்படுத்தவும் இல்லை; மறுக்கவும் இல்லை.
What's Your Reaction?