சென்னை: தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம், கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றது. கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோருடன் தனுஷும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தனுஷ் இயக்கி நடித்த படமாக ராயன் ரிலீஸானது. தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ராயனைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். 2கே கிட்ஸ்களின் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சேகர் கம்முலா இயக்கும் குபேரா, பாலிவுட்டில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் தனுஷ், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி தனுஷ் இயக்கும் புதிய படத்தின் அபிஸியல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கும் 4வது படமான இதற்கு ‘இட்லி கடை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநராக தனுஷின் 4வது படமாகவும், ஹீரோவாக அவரது 52வது படமாகவும் இட்லி கடை உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இட்லி கடை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அருண் விஜய் நடிப்பது குறித்து எந்த அப்டேட்டும் இடம்பெறவில்லை. ஒருவேளை இதுகுறித்து லேட்டாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - சிக்கந்தர் படத்துக்காக ஏஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம்!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு இட்லி கடை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனுஷ் தனது படங்களுக்கு ‘ராயன்’ போன்ற செம கெத்தான டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இட்லி கடை என டைட்டில் வைத்துள்ளது, இப்படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு கொடுத்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை டான், ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தனுஷும் சொந்தமாக தயாரிக்கிறார்.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் ஷூட்டிங் தேனியில் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அசோக் செல்வன் தான் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே ஆகியோரும் தனுஷுடன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள இட்லி கடை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிப்பு வெளியாகவில்லை.