பணி நேரத்தில் தூங்கியவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு..! இது புதுசா இருக்கே
சீனாவில் பணி நேரத்தில் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மகாணத்தில் டாக்ஸிங் (Taixing) நகரில் அமைந்துள்ள இரசாயன அலுவலகத்தில் ஜாங் (Zhang) என்பர் பணியாற்றி வந்தார். இரவு நேரத்தில் பணியில் இருந்த ஜாங் பணிச்சுமை காரணமாக தனது அறையில் தூங்கியுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை பார்த்த அதிகாரிகள் இதுகுறித்து ஜாங்கிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை ஒப்புக் கொண்ட அவர் தன் பணிச்சுமையின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்கியதாக தெரிவித்து, இதுதொடர்பான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தொழிலாளர் சங்கத்தில் கலந்தாலோசித்த அதிகாரிகள், இச்சம்பவம் கடுமையான கொள்கை மீறல் என குறிப்பிட்டு ஜாங்கை பணி நீக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அலுவலகம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ‘பணி நேரத்தில் தூங்கும் உங்களின் இந்த நடவடிக்கை அலுவலகத்தின் கொள்கை மீறல்களில் ஒன்றாகும். இதையடுத்து தொழிற்சங்கத்தின் அனுமதியின் பேரில் உங்களை பணிநீக்கம் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிதுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜாங் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், பணியின் போது தூங்குவது அலுவலகத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்றும் இதற்கு பணிநீக்கம் செய்வது மிகப்பெரிய தண்டனை என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முன்னாள் ஊழியர் ஜாங்கிற்கு, மூன்று லட்சத்து 50 ஆயிரம் யுவான் அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சத்து 78 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பணியின் போது முதன்முதலாக தூங்குவது குற்றமல்ல என்றும் அது அலுவலகத்திற்கு தீங்கு விளைவிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் சீனா சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. ஒரு தரப்பினர் பணிச்சுமை காரணமாக தூங்குவது இயல்புதானே, அதற்காக பணிநீக்கம் செய்வது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அது எப்படி பணியின் போது தூங்கலாம்? அது குற்றம்தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜாங் கடந்த 20 ஆண்டுகளாக இரசாயன அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியுள்ளார். தான் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக குட் பெர்பாமென்ஸ் (Good Performance) விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?