காஸாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்... 6 பேர் உயிரிழப்பு... பலர் படுகாயம்!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி காஸாவில் இருந்து வெளியேறி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.
போர் விதிகளை மீறி மருத்துவமனைகள் மீதும், பாதிக்கபட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது காஸாவின் வடக்கு பகுதியில் ஷெஜாயா என்ற நகரில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கி டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் ஷெஜாயா பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் 6 பேர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஷெஜாயா பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கு ஐநாவால் நடத்தப்படும் பள்ளியை ராணுவம் சிறைபிடித்த நிலையில், பள்ளியின் உள்ளே ஏராளமான ஆயுதங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ''எங்கள் இலக்குகளை அடையும் வரை நாங்கள் தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை. பணயக்கைதிகளை முழுமையாக எங்களிடம் ஒப்படைத்து, ஹமாஸ் அமைப்பினர் அழியும் வரை தாக்குதலில் இருந்து பின்வாங்க மாட்டோம்'' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?