ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு.... உறுதி செய்த இஸ்ரேல்!
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்துள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகத்திலும், அதன் அருகிலுள்ள ஐநா அமைதிப்படை தளம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஐநா அமைதிப்படையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி செய்திருக்கிறார். இதனை டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை பணைய கைதிகளாக ஈரானால் பிடிக்கப்பட்டு சென்ற இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவரது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதால் இந்த போர் ஒரு முடிவுக்கு வரும் என உலக நாடுகள் தெரிவித்திருக்கின்றனர்.
What's Your Reaction?