கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி.. கொடுமைப்படுத்திய அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 104 பேரை நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா தண்டனைக் குற்றவாளிகளைப் போல் கைகளுக்கு விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்கு கண்டனம் வலுத்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்....

Feb 6, 2025 - 20:16
 0
கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி..  கொடுமைப்படுத்திய அமெரிக்கா..  கொந்தளிக்கும் இந்தியர்கள்..!
கைகளில் விலங்கு, கால்களில் சங்கிலி.. கொடுமைப்படுத்திய அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக அரியணை ஏறிய டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல நாடுகளுக்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது, போர் உதவிகளை நிறுத்த திட்டங்கள் தீட்டுவது, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது என பல அதிரடிகள் அமெரிக்காவில் நிகழ்ந்து வருகிறது. அதிலும், அமெரிக்கர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கி ஆட்சியை நடத்தி வரும் ட்ரம்ப், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என தேர்தல் பரப்புரையில் சூளுரைத்திருந்தார். அதனின் தாக்கத்தை தற்போது இந்தியர்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர். 

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாகவும், அதில் முதற்கட்டமாக 18 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பட்டியலில் அமெரிக்கா கண்டறிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்த நிலையில், முதற்கட்டமாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கடந்த 4 ஆம் தேதி ராணுவ விமானத்தில் 104 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5ஆம் தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸில் வந்திறங்கிய இந்தியர்கள், தங்களை அமெரிக்க அதிகாரிகள் கன்னியக்குறைவாக நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களில் சங்கிலியால் கட்டி ராணுவ விமானத்தில் ஏற்றிய வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...

இந்தியர்களை ஏலியன்ஸ் என்று குறிப்பிட்டு ஏளனம் செய்துள்ள அந்த அதிகாரி, சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று கொக்கரித்துள்ளார். இந்தியர்கள் கன்னியக்குறைவாக நடத்தப்பட்டது நாட்டு மக்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜஸ்பால் சிங் என்கிற இந்தியர் தன்னுடைய இந்த பயணத்தில் நடந்த பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். ”2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு ஏஜெண்ட் மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்ட்ட அவர், இதற்காக 30 லட்சம் ரூபாயை செலவிட்டதாகவும் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். பஞ்சாப்பில் இருந்து முதலில் ஐரோபாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பிரேசில் சென்று பின்னர் அமெரிக்க எல்லைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லையை கடக்க முயன்ற போது அங்கிருந்த பாதுகாப்பு ரோந்து படையினரிடம் பிடிபட்டு 11 நாட்கள் முகாமில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் வேதனையை பகிர்ந்துள்ளார். 

திடீரென கைகளுக்கு விலங்கு போட்டு, கால்களை சங்கிலியால் கட்டி விமானத்தில் ஏற்றி வந்தனர். நான் வேறொரு முகாமிற்கு மாற்றப்படுவதாக எண்ணினேன். ஆனால், பஞ்சாபுக்கு வந்து இறங்கிய பிறகு தான் நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளோம் என்று தெரிந்தது”, என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார். 

எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று கூட சொல்லாமல் அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட செயல் இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow