"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Feb 6, 2025 - 20:53
 0
"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" -  எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்
"தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" - எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது என ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த விண்ணப்பங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உரிமைகள் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு சூரியமூர்த்தியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தடையை நீக்க கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுக்களுக்கு பதிலளிக்கவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.

மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில்,  முன்கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசுக்கு பதிலளித்ததாகவும், மற்றவர்கள் மனுக்களை விசாரிக்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் உள்ள நிலையில், இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது. அதனால் மற்றவர்கள் அளித்த மனு மீது விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பின் வாதத்துக்காக வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow