தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரை ஓரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், ”வரக்கூடிய அக்டோபர் டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திலேயே அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்தே சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்க முடியும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பருவமழை தொடங்க உள்ள நிலையில், அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து குமுதம் செய்திகளுக்கு தெரிவிக்கையில், “பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. முதல்வர் இது குறித்து ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கடந்த முறை பாதிப்புகளை மையமாக வைத்து பல பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.
சென்னை முழுவதும் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அருகில் உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. மழைநீர் வடிகால்வாய் பணிகள் பல இடங்களில் முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில இடங்களில் முடியவில்லை.
அங்குதான் கூடுதலாக தண்ணீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் மக்கள் தங்குவதற்கான சமுதாய நல கூடங்கள், உணவு தயாரிப்பதற்கான கூடங்கள் தயார் நிலையில் இருக்கிறது. மின்வாரியத்திற்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளோம். மின்வயர்களுக்கு ஆபத்தாக காணப்படும் மரக்கிளைகளை வெட்ட அறிவுறுத்தி உள்ளோம்.
விபத்து ஏதேனும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம். 2, 3 நாட்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கு தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்” என்றார்.