நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள்
சென்னையில் நடைபெற்ற காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நம்மால் காவல்துறை இழுக்கு ஏற்படக்கூடாது எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவலர்களின் நற்பணிக்காக முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை காவல் ஆணையர் அருண் பதக்கங்களை காவலர்களுக்கு அணிவித்து வாழ்த்தினார்.
தமிழகம் முழுவதும் 3000 காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான பதக்கம் அறிவிக்கப்பட்டது. சென்னை காவல் துறையில் 515 காவலர்களுக்கும். சென்னையில் பணியாற்றும் பிற பிரிவு காவலர்கள் 255 பேருக்கும் சேர்த்து மொத்தம் 770 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் 400 ரூபார் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறினார்.
காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி சென்னை காவல் ஆணையர் அருண் பேசுகையில், "தமிழ்நாடு காவல் துறையில் மெச்சதகுந்த பணியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை அறிவித்தார். இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் காவலர் பதக்கம் 3000 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசிலும் மாநில அரசிலும் பணியாற்றுபவர்கள் அரசு ஊழியர்கள். அரசு பணியில் பல்வேறு துறை இருந்தாலும் பொதுமக்களிடம் நெருக்கமாக பணியாற்றும் ஒரு சில துறையில் காவல் துறை முதன்மையானது. மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் நமது பணியயை அரசு பணி என கூறாமல் மக்கள் பணி என்றே கூறவேண்டும்.
பொதுமக்களுடன் காவல் அதிகாரிகள் பரிவோடு அவர்களை நடத்தி குறைகளை கேட்டு சட்டத்திற்குட்பட்டு தீர்வு காண வேண்டும். அவ்வாறு மக்கள் பணி செய்து மக்களிடம் பாராட்டு பெறுவது தான் மிகப்பெரிய பதக்கம் என்று தெரிவித்தார்.
சென்னை காவல் துறையில் 23 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுகிறது. நம்மால் காவல்துறைக்கு எந்த இழுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும் என்பது வேண்டுகோள்" என்று காவல் ஆணையர் அருண் பேசி உள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் பதக்கம் பெற்ற காவல்துறையினருடன் காவல் ஆணையர் அருண் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்
What's Your Reaction?