Rain Update: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... நவம்பரில் தரமான சம்பவம் இருக்கு!
வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு ஆந்திர வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இரண்டாவது வாரத்தில் அது தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே செல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சென்னை அடுத்த பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் காட்டுப்பாக்கம் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கும் சூழல் உருவானது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, அகூர், மத்தூர், முருகம்பட்டு, பட்டாபிராமபுரம், கே.ஜி கண்டிகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் திடீரென கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழையால் சித்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென காற்றுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் தென்காசி பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
What's Your Reaction?