20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவு..!
20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமீன்க்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நால்வரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பு வழக்கறிஞர் அருள் செல்வம் , ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை முடிந்துவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். இதனையடுத்து, இவர்கள் எந்த கருணையும் பெற தகுதியற்றவர்கள் எனக்கூறிய நீதிபதி, ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
What's Your Reaction?