கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Feb 4, 2025 - 14:47
 0
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு
கோப்பு படம்

தமிழகத்தில் இருந்து மூன்று கண்டெய்னர் லாரிகளில் 117 மாடுகளும், இரண்டு கன்றுகளும் கேரளாவுக்கு அடிமாடுகளாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், செங்கல்பட்டு மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார், லாரிகளை மடக்கிப் பிடித்து, கால்நடைகளை மீட்டு, திருவள்ளூரில் உள்ள ஒரு கோசாலைகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த கால்நடைகள் ஆந்திராவில் இருந்து விவசாயத்திற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் உரிய உரிமங்களுடன் கொண்டு வரப்பட்டது எனவும் அவை துன்புறுத்தப்படவில்லை  எனவும் கூறி, கால்நடைகளை ஒப்படைக்க கோரி அவற்றின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கால்நடைகளில் பல கருத்தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை இனப்பெருக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன என்ற வாதம் தவறு எனவும், மனித தன்மையற்ற முறையில் அவை கொண்டு செல்லப்பட்டுள்ளன எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கால்நடைகளை பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் நீதிபதி அறிவித்துள்ளார்.

அதன்படி, லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதியுடன் கொண்டு செல்ல வேண்டும்.

  •  முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.
  •  கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா? என பரிசோதனை நடத்திய பிறகே அவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
  • முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை நீதிபதி நிரமல்குமார் வகுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow