40 சவரன் தங்கம், 3.1/2 கிலோ வெள்ளி கொடுத்தும் பத்தல... வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்!
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான இரண்டே ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய பல்லாவரம், வாத்தியார் மாணிக்கம் தெருவை சேர்ந்தவர்கள் சண்முகம் - ஜானகி தம்பதி. இவர்களுக்கு குமார் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் இருந்தனர். இதில் மூத்த மகனான குமார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இதையடுத்து இரண்டாவது மகள் லாவண்யாவை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்தின்போது சண்முகம் மற்றும் ஜானகி, சிவபாலனுக்கு 40 சவரன் தங்க நகைகள், 3.1/2 கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 3 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை வரதட்சனையாகக் கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சிவபாலன், அவரது தாய் தந்தையுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு லாவண்யாவை துன்பப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கணவர் சிவபாலன் அடித்து லாவண்யா தலையில் காயம் ஏற்பட்டு ஒரு வருடமாக மருந்து எடுக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதோடு நிற்காமல் வரதட்சணை கேட்டு மனதளவிலும் உடலளவிலும் லாவண்யாவை தொடர்ந்து புகுந்த வீட்டில் துன்பப்படுத்தியிருக்கின்றனர். மேலும் சிவபாலன் தனது அரசு வேலைக்காக லாவண்யாவிடம் ரூ. 10 லட்சம் கேட்டு அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த லாவண்யா, நேற்று (நவ. 25) தனது தந்தை சண்முகத்திற்கு போன் செய்து தன்னால் இங்கே இருக்க முடியவில்லை எனவும், வீட்டிற்கு வந்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சண்முகம், நேரில் வந்து இதுகுறித்து பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து, லாவண்யாவின் மாமியார் சண்முகத்திற்கு போன் செய்து, உங்களது மகள் தூக்கில் தொங்கி இறந்து விட்டார் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சண்முகம், தனது மனைவி ஜானகியை அழைத்துக்கொண்டு பழவந்தாங்கல் வருவதற்குள் போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், லாவண்யாவின் புகுந்த வீட்டில் அவருக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாகவும் போலீசாரிடம் புகாரளித்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட போலீசார், லாவண்யா தூக்கிட்டு இருந்தாரா அல்லது வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?