தமிழகத்தில் சமீபகாலமாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்கள், மாணவிகள், சிறுமிகள், காவலர்கள் என அனைவரும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவலர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்தில் மயிலாடுதுறையில் மூன்றரை வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்கள் சிதைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள் சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய முன்னாள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சிறுமியின் மீது குற்றம் இருப்பதாக கருத்து தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது பள்ளி மாணவிக்கு தமிக வெற்றிக் கழக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இரவு வீட்டில் தனியாக தூங்கி உள்ளார். மாணவியின் பாட்டி வீட்டின் வெளிப்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது கடத்தூர் பகுதியில் மல்லிகை கடை நடத்திவரும் சுதாகர் என்பவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெண்களுக்கான இலவச புகார் எண் 1098-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு சுதாகரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தார். கைது செய்யப்பட்ட குற்றவாளி சுதாகர், தமிழக வெற்றிக் கழகத்தின் கடத்தூர் நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.