சென்னை: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்த 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது. அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியறுத்தி இருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்பு வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
மேலும் கள்ளச்சாராய சம்பவத்தில் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்பிறகு கள்ளச்சாராயம் குடித்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஷாகுல் ஹமீது, ஜோசப் ராஜா, மாதேஷ், ராமர், சக்திவேல், கண்ணன், சிவக்குமார், கண்ணன் உறவினர் கதிர் (எ) கதிரவன், அய்யாசாமி, தெய்வீரா(எ) தெய்வீகன், ஹரி முத்து, பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின், வேலு என 22 பேர் கைது செய்யபட்டு இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கும், காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் இருவரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பரமசிவம், முருகேசன் இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.