‘மேக் இன் இந்தியா’ தோல்வியடைந்த திட்டம்.. நான் பிரதமரை குறை கூறவில்லை- ராகுல் காந்தி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் விளைவு உங்களுக்கு முன்னால் உள்ளது என்றும் பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் தோல்வியடைந்து விட்டார் என்றும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

Feb 3, 2025 - 16:33
 0
‘மேக் இன் இந்தியா’ தோல்வியடைந்த திட்டம்.. நான் பிரதமரை குறை கூறவில்லை- ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2025-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். தொடர்ந்து, இரண்டாவது நாளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (பிப் 3) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, "குடியரசு தலைவர் உரை கடந்த சில ஆண்டுகளாக மாறாமல் அப்படியே உள்ளது. அரசு செய்த காரியங்களின் அதே சலவை பட்டியல்தான். குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. 

வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சனை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ  அல்லது இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. 

பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் விளைவு உங்களுக்கு முன்னால் உள்ளது. 2014 -இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதமாக இருந்த உற்பத்தி, இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது 60 ஆண்டுகளில் உற்பத்தியின் மிகக் குறைந்த பங்காகும். நான் பிரதமரைக் குறை கூறவில்லை. அவர் முயற்சி செய்தார், ஆனால் தோல்வியடைந்தார்.

மக்கள் ஏஐ பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஏஐ என்பது முற்றிலும் அர்த்தமற்றது என்பதை புரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் ஏஐ, தரவுகளின் மேல் இயங்குகிறது. தரவு இல்லாமல், ஏஐ என்பது ஒன்றுமில்லை. ரோபோக்கள், பேட்டரிகள், மோட்டர்கள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து உற்பத்தித் துறைகளிலும் சீனா முன்னணியில் இருக்கிறது. நாம் பின் தங்கியே இருக்கிறோம். 

நாம் அமெரிக்காவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி நமது பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைக்கவில்லை. உற்பத்தித் துறையில், தொழில்நுட்பத்துறையில் நாம் முன்னணியில் இருந்தால் அமெரிக்காவின் அதிபர், இந்தியாவுக்கு வந்து நமது நாட்டு பிரதமரை தங்களது நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 90 சதவீதம் பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டோரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow