கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

Feb 3, 2025 - 15:51
Feb 3, 2025 - 16:11
 0
கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்
கல்பனா நாயக்

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது ஜூலை மாதம் 29-ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த போது அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் இல்லை.

இந்த நிலையில், தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயர், தமிழக டிஜிபி, உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தன்னை கொல்ல நிகழ்த்தப்பட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார்.  அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் முடிவுகள் வெளியான விவகாரத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது குறித்து சுட்டி காட்டப்பட்டதாகவும், இது தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நடந்து 15 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்பனா நாயக், தமிழக டிஜிபி  சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சென்னை காவல் ஆணையருக்கும் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கல்பனா நாயர் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்து நடந்த பிறகு திருத்தப்பட்ட பட்டியல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தீ விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணையும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏடிஜிபி கல்பனா நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் திட்டமிடப்பட்ட தீ வைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன.

தடவியல் துறை, தீயணைப்புத்துறை, மின் துறை சார்ந்த நபர்கள் இடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்றே தீயணைப்புத்துறை, தடவியல் துறை மற்றும் மின்துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கூடிய பொருட்கள் தீ விபத்தில் இல்லை என்பது வேதியியல் பூர்வமான ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow