தமிழ்நாடு

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்

இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெயிண்ட் அடிப்பது தான் வேலையா? - மத்திய அரசை சாடும் தமிழகம்
பிஎஸ்என்எல்-இன் புதிய லோகோவை மத்திய அரசு வெளியிட்டது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை ஒன்றிய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் புதிய லோகோவை மத்திய அரசு வெளியிட்டது.

அதில், லோகோ காவி நிறத்திற்கு மாற்றியிருப்பதும், பிஎஸ்என்எல் 'கனெக்ட்டிங் இந்தியா' என்பதை பிஎஸ்என்எல் 'கனெக்ட்டிங் பாரத்' என்று மாற்றப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியின் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் லோகோ மாற்றப்பட்டது குறித்து தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “தொலைதொடர்பு சந்தையை தனியாருக்கு தந்துவிட்டு BSNLக்கு  "புதிய லோகோ" வை  தந்து மகிழ்ந்துள்ளது ஒன்றிய அரசு.

காவி நிறம்... "இந்தியாவை" இணைக்கிறோம் என்பதற்குப் பதிலாக  "பாரத்" ஐ இணைக்கிறோம் என்று மாற்றம்.

திருவள்ளுவரா.. வந்தேபாரத்தா… பிஎஸ்என்எல் லா, எல்லாத்துக்கும் காவி பெயிண்ட் அடிப்பது மட்டுந்தான் ஒன்றிய அரசின் முழுநேர தேசப்பணி” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”BSNL நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன்?

அரசியல் களத்தில் தடுமாறுவதால், நிறத்தில் அரசியல் செய்கிறீர்களா? Connecting India என்ற வாசகம்  Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது.  I.N.D.I.A கூட்டணி எழுச்சியுறுவதால் அந்த வார்த்தை கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.