காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடிமகன்கள் மதுபானங்களை குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை சாலைகளிலும், கால்வாய்களிலும், மலைப்பகுதிகளிலும் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்சனை சுற்றுலா தலங்களிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மதுபாட்டில்களை டாஸ்மார்க் நிர்வாகமே திரும்ப பெற முடிவு செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோரி மனு தாக்கல்.. அபராதம் விதித்த நீதிமன்றம்
அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?