ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்துக்கு எதிராக களமிறங்கிய பைலட்.. யார் இந்த பைராகி?

பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட பைராகி, 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

Sep 11, 2024 - 13:59
Sep 11, 2024 - 14:02
 0
ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்துக்கு எதிராக களமிறங்கிய பைலட்.. யார் இந்த பைராகி?
Bairagi

சண்டிகர்: 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. இதேபோல் இந்த முறை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதற்கிடையே மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த உடன் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது அவர் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு எதிராக யோகேஷ் பைராகி என்பவரை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.

35 வயதா பைராகி ஹரியானா மாநிலம் சாஃபிடன் பகுதியை சேர்ந்தவர்.  ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்த  யோகேஷ் பைராகி, கொரொனா காலக்கட்டத்தின்போது மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டதின்கீழ் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளார். மேலும் சென்னை பெரு வெள்ளத்தின்போதும் மக்களை மீட்டு சிறப்பான சேவைக்காக பெயர் எடுத்தவர். 

பின்னர் பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட  யோகேஷ் பைராகி,  7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு கட்சியில் அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு எதிராக பைராகியை பாஜக களமிறக்கியுள்ளது அக்கட்சியின் தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் வினேஷ் போகத் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டவர்.  கடந்த ஆண்டு சக மல்யுத்த வீராங்கனைகளுடன் இணைந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடியபோது வினேஷ் போகத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு பெருகியது. மேலும் ஒரு விளையாட்டு வீரராக மக்களின் மத்தியில் பிரபலமாக விளங்குவதால் வினேஷ் போகத் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 

மறுபக்கம் பைராகியை எடுத்துக் கொண்டால் வினேஷ் போகத் அளவுக்கு அவர் மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் ஹரியானாவில் பாஜக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் பைராகிக்கு வெற்றியை ஈட்டித்தரும் என பாஜகவினர் உறுதியாக கூறுகின்றனர். கருத்துகள் பலவிதமாக இருந்தாலும் ஜூலானா தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவின்போதுதான் தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow