தீபாவளி ரயில் புக்கிங்.. 2 நிமிஷம்தான் உடனே வெயிட்டிங் லிஸ்ட்.. ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு எப்போ?
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாடு முழுவதும் தீபாவாளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் இடம் பெயர்ந்தவர்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம். தற்போது 2 அல்லது 3 நாட்கள் சேர்ந்தார் போல விடுமுறை வந்தாலே சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். வாரந்தோறும் சிறப்பு பேருந்துகளையும் அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயிலில் முன்பதிவு டிக்கெட் விற்பனை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது 28ஆம் தேதி திங்கட்கிழமை இரவு தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் நேற்று காலை டிக்கெட் புக் செய்தனர்.ரயில்வே இணைய தளத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முன் பதிவு முடிந்து வெயிட்டிங் லிஸ்ட் காட்டியது.
அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இன்று காலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ரயில்களில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. தீபாவளிக்கு முதல்நாள் அக்டோபர் 30ம் தேதி பயணம் செய்ய நாளைய தினம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாதோர் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களான பாண்டியன், முத்துநகர், கன்னியாகுமரி,திருநெல்வேலி உள்ளிட்ட பல ரயில்களில் முன்பதிவு தொடங்கிய உடனே புக்கிங் முடிந்தது. பிற்பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் ரயில்களில் டிக்கெட்டும் முன்பதிவு முடிந்தது. அதே நேரத்தில் வந்தே பாரத், தேஜா எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே டிக்கெட்கள் இருந்தன. அந்த ரயில்களில் டிக்கெட் விலை அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பல ரயில்களில் இப்போதே வெயிட்டிங் லிஸ்ட் 200க்கு மேல் உள்ளதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?