இந்தி திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்.. மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில கல்லூரி மாணவர்கள் பேசியதாவது, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தமிழகத்திற்கு கல்வி உதவித் தொகையை வழங்க மாட்டோம் என கூறிய மத்திய கல்வித்துறை அமைச்சர் அதிகார திமிரோடு பேசியதை கண்டித்தும் ஜனவரி மாதம் யுஜிசி வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் போராட்டம் மேற்கொண்டோம்.
மாநில உரிமையை பறிக்கக்கூடிய வகையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசு தமிழத்திற்கு வழங்க வேண்டிய நிதியை சரியாக வழங்க வேண்டும் எனவும் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் எப்பாடியாவது இந்தியை திணிக்க வேண்டும் என நினைக்கும் பாஜக எண்ணம் எடுப்படாது. மத்திய பாஜக பாசிச அரசு தொடர்ந்து இந்தியை திணிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. இது தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழி போருக்கு வழி வகுக்கும் எனவும் அதனை எதிர்த்து அனைத்து கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெறும் எனவும் கூறினார்கள்.
கல்வி உரிமையும், மாநில உரிமையும் பாஜக அரசு பறிக்க நினைக்கிறது. தமிழ் மொழிக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உயிர் தியாகம் செய்துதாவது மொழியை காப்போம் எனவும் மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநில கல்லூரி மாணவர்கள் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தனர்.
முன்னதாக, உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு அரசியல் காரணத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு மறுக்கிறதா? மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு இரண்டாயிரத்து 152 கோடி ரூபாய் கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






