குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முக்கியமாக ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வசதியுடன் கூடிய பாதுகாப்பான பயணங்களுக்காகவே பலரும் ரயிலை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனாலும், கடந்த சில தினங்களாகவே ரயிலில் நடக்கும் குற்றங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. ராணிப்பேட்டையில் ரயிலில் பயணித்த கர்ப்பிணியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவரை தாக்கி நகையை பறித்துச் சென்றது ஆகியவை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ரயில்வே காவல்துறைக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டார். மேலும் ரயில் நிலையங்களில் குழந்தைகள் கடத்தலை தடுக்க, ரயில்வே காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்படி, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சட்ட நிபுணர்கள், ரயில்வே பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கினர்.
ரயில் நிலையத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டாலோ, வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தாலோ, அந்த வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? குழந்தைகள்நல குழுவை அணுகுவது எப்படி? பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் எந்தெந்த வகையில் பேச வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் ரயில்வே போலீஸ் ஐஜி பாபு, ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரன், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு ஐஜி ஈஸ்வர ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர். அப்போது தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் 100 பெண்களை மீட்டு பெற்றோரிடமும், அரசு காப்பகங்களிலும் ஒப்படைத்துள்ளதாகவும், ராணிப்பேட்டை சம்பவத்திற்குப் பிறகு, பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் பாதுகாப்பை ரயில்வே போலீசார் அதிகரித்துள்ளதாகவும் ரயில்வே காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் பயணிக்கும் பெட்டியில், சந்தேகப்படும்படி சுற்றிய 899 பேர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல ரயில் நிலையங்களில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொறுத்தவில்லை என்றும், அவைகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. ரயில்வேதுறை, ரயில்வே பாதுகாப்புபடை, ரயில்வே போலீஸ் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதனால், இதுபோன்ற பயிற்சி வகுப்புகளோடு நிறுத்தாமல், அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் குற்றங்களை தடுக்க முடியும் என பெண் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.