சமூக ஆர்வலர்களை தாக்கிய மணல் மாஃபியாக்கள்!
மண் கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்ட சமூக ஆர்வலர் மீது திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் சமூக ஆர்வலரான இவர் அப்பகுதியில் நடைபெறும் மணல் கடத்தல், ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடு, ஏரிகளில் மண் திருட்டு ஆகியவை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் செங்கம் பகுதியில் இருந்து போளூர் செல்வதற்கு நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலை அமையும் பகுதியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை அமைக்கும் பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பூமி பூஜை செய்து உள்ளார்.
மேலும் சாலை விரிவாக்க பணிகள் முழுமையாக முடிவடையாததால் தற்போது அங்கு அமைக்கப்படும், நிழற்குடை அகற்றும் நிலை ஏற்படும் என்றும் இதனால் மக்கள் வரி பணம் 18 லட்சம் ரூபாய் வீணடிக்கப்படும் என சமூக ஆர்வலரான ஜெகநாதன் வாட்ஸப் குழுக்களில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக மாவட்ட பிரதிநிதி முருகையன் என்பவரின் தூண்டுதல் பெயரில் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் திமுக நிர்வாகியான செங்கல் சூளை அதிபர் பச்சையப்பன் என்பவர் இன்று காலை சமூக ஆர்வலரான ஜெகநாதனை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதும் தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது குண்டர்களை வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுபோன்று மணலை சட்டவிரோதமாக எடுப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறை இந்த சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






