சிறார்கள் ஏற்படுத்தும் வாகன விபத்து முதலிடத்தில் தமிழ்நாடு.. அதிர்ச்சித் தரும் iRAD ரிப்போர்ட்!
இந்தியளவில் சிறுவர்கள் அதிகம் விபத்தில் சிக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று வெளியாகி இருக்கும் புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியை, அங்குள்ள சாலை போக்குவரத்தின் தரத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதேபோல், உலகின் மிக மோசமான தீவிரவாதம் என்பது, அந்நாட்டின் சாலை போக்குவரத்து விதிமீறல்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த கோட்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் சாலை போக்குவரத்தும், அதில் நடக்கும் விதிமீறல்களும் பெரும் கவலைகொள்ள செய்கிறது. சமூக வலைத்தளங்கள் பக்கம் போனாலே, அதிகமாக கண்ணில் படுவது விபத்து காட்சிகளாக தான் உள்ளன. இதில் முக்கியமாக 18 வயதுக்குள்ளான மைனர் இளம் சிறார்கள், பள்ளி மாணவர்களால் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
அதன்படி, 2023-24 காலக்கட்டத்தில் மட்டும், இரண்டாயிரத்து 63 சிறார்கள் வாகன விபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் Integrated Road Accident Database தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் சுமார் 3 கோடி இருசக்கர வாகனங்கள் இருப்பதாகவும் iRAD தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது. பைக் அல்லது கார் என எந்த வாகனங்களை ஓட்டினாலும், அதிகபட்சமாக அனைவரும் தெரிந்திருப்பது ஆக்ஸிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் தான். ஆனால், அடிப்படையான சாலை விதிகள் என்ன என்பதே இங்கு பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அதனை அவர்கள் முறையாக ஃபாலோ செய்வதில்லை.
டிரைவிங்கில் நல்ல அனுபவம் உள்ளவர்களில் சிலரே இப்படி அஜாக்கிரதையாக இருக்கும் போது, மைனர் சிறார்கள், பள்ளி மாணவர்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன?. வேகமாக பைக் ஓட்டுவது, கவனக்குறைவாக பாதைகளைக் கடப்பது, திரும்பும் போது இண்டிக்கேட்டர் எனப்படும் சிக்னல் போடாதது, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் திரும்புவது என இருக்கும் எல்லா தவறுகளையும் மொத்தமாக செய்கின்றனர். இன்னொன்று வயது முதிர்ச்சியின்மை காரணமாக பதற்றத்திலும் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போதும், காவல்துறையினர் பெரும்பாலும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பள்ளி ஊழியர்களுக்கு தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், எதிர்கால நலன் கருதி அரிதாகவே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தவிர்க்க முடியாத போது, விபத்தை ஏற்படுத்தும் மாணவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதன்படி, 2022ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகளின் கீழ், தங்கள் குழந்தை விபத்தில் சிக்கினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 25,000 அபராதமும் விதிக்கப்படலாம். ஆனால் பெற்றோருக்கு முதல் விசாரணையிலேயே ஜாமீன் கிடைத்துவிடுகிறது. இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், பெரும்பாலான பெற்றோர்கள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது பெரும் அவலம். இதனால் இந்த நடவடிக்கை விபத்துகளை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம், பள்ளிகளில் வழக்கமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டும் அதற்கு பலனில்லை என்பதே உண்மை.
அதேபோல், 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு learner's licences வழங்கும் செயல்முறையிலும் பல தகிடுத்தங்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் விண்ணப்பதாரர்கள் அனைவரும் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் நேரில் தேர்வுகளை எழுதினர். ஆனால், தற்போது ஆன்லைன் தேர்வு நடைபெறுவதால் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் எல்லாம் லைசென்ஸ் வேண்டும் என்றால், ஆன் ஃபீல்ட், ஆஃப் ஃபீல்ட் என பல டெஸ்ட்கள் நடத்தப்படுகின்றன. இங்கே அது வெறும் சம்பிரதாயமாகிவிட்டதும் இப்படி விபத்துகள் அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது. LLR என்ற learner's licences தேர்வுகளில் 99.5% தேர்ச்சி பெறுகின்றனர். இதுவே இங்கிருக்கும் சிஸ்டம் எவ்வளவு மோசமாக இருப்பது என்பதை புரிந்துகொள்ள முடியும். கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னிலையில் இருக்கும் தமிழகம், விபத்துகளில் இப்படியொரு மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளது. இனியேனும் இது மாறும் என எதிர்பார்க்கலாம்.
What's Your Reaction?






