பிரதமர் இல்லம் சூறை; நாட்டைவிட்டு தப்பிய ஷேக் ஹசீனா - வங்கதேசத்தில் வன்முறை தாண்டவம்

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடிச் சென்றனர்.

Aug 5, 2024 - 20:18
Aug 6, 2024 - 10:08
 0
பிரதமர் இல்லம் சூறை; நாட்டைவிட்டு தப்பிய ஷேக் ஹசீனா - வங்கதேசத்தில் வன்முறை தாண்டவம்
பிரதமர் இல்லத்தில் உள்ள பொருட்களை சூறையாடிய போராட்டக்காரர்கள்

அரசு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்து திறமையின் அடிப்படையில் வேலை வழங்க வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 93 சதவீத இடங்களை திறமையின் அடிப்படையிலும், 7 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்புமாறு தீர்ப்பில் கூறியுள்ளது.

இடஒதுக்கீடு நடைமுறை வங்கதேச அரசுப் பணியிடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம், பின் தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறு பான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதம் என 56 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமலில் உள்ளது.

1971ஆம் ஆண்டு வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் கொடுக்கப்பட்டு வரும் 30 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் எனவும் திறமையின் அடிப்படையிலேயே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வங்கதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த இடஒதுக்கீடு என்பது வங்கதேச நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி இறந்தவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் வரை தொடர்கிறது. இதனால் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது.

நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மையால் தவித்து வரும் மாணவர்கள் இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் திரும்பப்பெற வேண்டும் எனவும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான இடஒதுக்கீடு தொடரட்டும் எனவும் கூறி வந்தனர். மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக ஹசீனா அரசு 2018ஆம் ஆண்டு அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தியதை தொடர்ந்து ஜூலை 5 முதல் மீண்டும் போராட்டம் வெடித்தது. போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையடுத்து கடந்த 2018இல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு என்பது ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூன் 5ஆம் தேதி விசாரித்த அந்நாட்டின் உயர்நீதிமன்றம் மீண்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தது போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது.

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர். மேலும், பிரதமரின் இல்லத்தில் உள்ள பொருட்களை சூறையாடியதோடு, அவர்கள் பிரதமர் வளாகத்தையும் சேதப்படுத்தினர். போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் தந்தையான பங்களாதேஷின் சுதந்திர நாயகன் என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையையும் சேதப்படுத்தினர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வங்கதேசத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், வங்கதேசத் தலைநகர் டாக்காவில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியா ரயில்வே அறிவித்துள்ளது. போராட்டக்களமாக இருக்கும் வங்கதேசத்திற்கு தற்போது இந்தியர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வங்கதேசத்தில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகத்தை +8801958383679 +8801958383680 +8801937400591 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow