நீலகிரியை போட்டுத் தாக்கும் கனமழை.. மக்களே உஷார்.. இதை செய்யாதீங்க.. மாவட்ட ஆட்சியர் வார்னிங்!
''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் செய்ய வேண்டாம். நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது.
அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மரம் மற்றும் தடுப்பு சுவர்களின் அடியில் வாகனங்களை நிறுத்தவோ, பொதுமக்கள் நிற்கவோ வேண்டாம்.
மழைப்பொழிவின் போது மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை பொதுமக்கள் தொடவோ அருகில் செல்லவோ கூடாது, மழை காரணமாக இயற்கை இடர்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையான 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்'' என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
What's Your Reaction?