காஸா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது.
போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரையில் இந்த போரை நிறுத்த மாட்டோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார். இதற்கிடையே ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்கி வருகின்றனர்.
மேலும் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏமனில் இருந்து இஸ்ரேலின் துறைமுக நகரமான ஈழத் நோக்கி வந்த 3 ஏவுகணைகளை வழிமறித்து அழித்துள்ளோம். இதன்பிறகே ஏமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதேபோல் தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுதவிர, பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்ததில் அப்பாவி மக்கள் 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிராந்திய எல்லையோர பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.