வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வாட்ஸ் குழுவில் ஆற்று நீர் வீணாகிறது என புகார் தெரிவித்த தொழிலாளியை திமுக நிர்வாகி ஒருவர் தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வீடியோ வேகமாக பரவியதால் போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக நிர்வாகியை தேடி வருகின்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அடுத்த புதுக்குறிச்சி அருகே ஆழ்வாநேரி உள்ளது. ஆழ்வாநேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள் (40). இவர் பாளையங்கோட்டையில் உள்ள டீக்கடை, ஹோட்டல்களில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவருடைய ஊரில் திமுக நிர்வாகி எட்வர்ட் (37) என்பவரது வீட்டுக்கு அருகே, ஆற்றுநீர் நல்லி ஒன்று உள்ளது. இந்த நல்லியில் இருந்து அடிக்கடி ஆற்றுநீர் வீணாகி தெருவில் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?
இதைப் பார்த்த அருள் அந்தப் பகுதியைச் சேர்ந்த போலீசார், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியின் பெயரை குறிப்பிடாமல், ஆற்று தண்ணீர் வீணாகிறது எனவும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி எட்வர்ட் அருளை தேடி அலைந்து உள்ளார். இந்த நிலையில் அருள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து அங்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அருளை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து தரையில் அமர வைத்து ஆடியோ மெசேஜ் போட்டதற்காக எட்வர்ட் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்களே உஷார்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
இதை வீடியோவாக எடுத்து அவர் அதே வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக அருள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில் சமீபத்தில் திமுக நிர்வாகி தொழிலாளியை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து திமுக நிர்வாகியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






