திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ.. ‘பரிதாபங்கள்’ சேனலுக்கு ஆதரவு அறிக்கை
திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்திலும் திருப்பதி லட்டுகள் குறித்த பேச்சுதான் உலவி வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருப்பதி லட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளமான யூட்யூபில், ‘பரிதாபங்கள்’ சேனல் திருப்பதி லட்டு குறித்து நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும், கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அந்த வீடியோ நீக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவுக்காக சேனல் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டது. இதனையடுத்து, அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானதில் பத்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுளில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திரமாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திருப்பதி லட்டு இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இவ்வாறு, மக்களிடையே பேசுபொருளாக மாறும் ஒரு விவாகரம் அரசியல், கலை, பண்பாடு கான அனைத்து தளங்களிலும் எதிரொலிப்பதும், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளுடன் ஒரு விவாதம் நடைபெறுவதும் ஆரோக்கியமான ஜனநாயகப்பூர்வமான சமூகத்தில் இயல்பானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் இந்தியாவை அப்படியாகவே வரையறுத்துள்ளது.
இருந்தபோதும். திருப்பதி வட்டு குறித்து தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, அக்கருத்தை வெளியிட்டவர்களை சிலர் மிரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக. 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவுக்கு தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதை வெளியிட்ட கோபி, சுதாகரை மிரட்டி, அந்த வீடியோவையே நீக்கச் செய்துள்ளனர். நகைச்சுவை மூலமாக நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கலை வடிவம், நிகழ்ந்துக் கலைகளில் மிக முக்கியமானது. இந்த கலை வடிவத்தை பின்பற்றும் கோபி - சுதாகர், மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர்.
இதேபோல், குணால் சும்ரா, முனாவர் ஃபரூக்கி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்கும். பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதுடன் அவர்கள் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். கோபி சுதாகர் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் தொழிலை முடக்கும் வகையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆகவே, கோபி-சுதாகர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது எனவே கருத்துரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"பரிதாபங்கள்' யூடியூப் சேனல் வெளியிட்ட திருப்பதி லட்டு குறித்த விடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்ட அனைவரும் ஒருங்கிணைத்து, இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






