தொப்புள்கொடி சர்ச்சை.. இர்ஃபான் போட்ட ஒற்றை வீடியோ.. மருத்துவமனைக்கு விரைந்த குழு!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது போன்ற வீடியோவை யூடியூபில் இர்ஃபான் வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் நேரடியாக ஆய்வுக்கு சென்றது மருத்துவக் குழு.

Oct 22, 2024 - 00:28
 0
தொப்புள்கொடி சர்ச்சை.. இர்ஃபான் போட்ட ஒற்றை வீடியோ.. மருத்துவமனைக்கு விரைந்த குழு!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது போன்ற வீடியோவை யூடியூபில் இர்ஃபான் வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் நேரடியாக ஆய்வுக்கு சென்றது மருத்துவக் குழு.

 யூடியூபில் ஃபுட் ரிவியூ செய்து அதன் மூலம் பிரபலமானவர் இர்ஃபான். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். ஆரம்பத்தில் ஃபுட் ரிவியூ மட்டும் செய்துவந்த இர்ஃபான், அதன்பின்னர் சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரையும் நேர்காணல் செய்து வருகிறார். இதனிடையே தனது திருமண நிகழ்ச்சிகளையும் யூடியூப் சேனலில் அப்லோட் செய்து செமையாக கல்லா கட்டினார். அதுவே கொஞ்சம் ஓவர் டோஸ்ஸாக தற்போது அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் இர்ஃபான். 

இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவரது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டபடி குற்றம். இதனால் வெளிநாடு சென்றிருந்த போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினைத்தை தெரிந்துகொண்டு அதனை வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். 

மேலும், இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்த நிலையில், மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை இர்ஃபான் மன்னிப்பு வீடியோ கூட வெளியிடவில்லை. இந்த சர்ச்சைக்கு இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மேலும் ஒரு பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனது மனைவி குழந்தை பேறுக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனது முதல், குழந்தை பிறப்பு வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்துள்ளார் இர்ஃபான். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனலில் ஷேர் செய்ய, அது இப்போது சர்ச்சையாகியுள்ளது. 

முக்கியமாக அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக எடுத்த இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியையும் அவரே வெட்டியுள்ளார். குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறாகும். அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கில் வீடியோ எடுத்ததும், தனி நபர் உரிமையை மீறும் செயல். உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட உபகரணங்கள் முறையான மருத்துவ முறையில் சுத்தம் செய்யப்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் யூடியூபர் இர்ஃபான் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கியமாக இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கவும், மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளதாம். அதேநேரம் இந்த வீடியோ குறித்து யூடியூபர் இர்ஃபான் இதுவரை எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மருத்துவமனை மருத்துவர்கள் மீதும், யூடியூபர் இர்பான் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவநல பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் நடவடிக்கையாக இர்பான் வீடியோவை நீக்க யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பாக கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இர்ஃபானிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow