Rain Update: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு எப்படி..? நீலகிரி, கோவையன்ஸ் உஷார்!
Tamil Nadu Weather Update Today : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update Today : கடந்த சில தினங்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 9 துறைமுகங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மதியம் முதல் இரவு வரை, சென்னையின் பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. வெயிலின் தாக்கம் சிறிதும் இல்லாமல், குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேபோல், இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னை வானிலை மையத்தின் அறிவுறுத்தலின்படி, இன்று முழுவதும் இதேநிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் நீலகிரி மாவட்டமே ஸ்தம்பித்துபோய் உள்ளது. இன்றும் கனமழை பெய்தால் நீலகிரி பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கோவை மாட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கோவை பகுதி மக்கள் குடையுடன் வெளியே செல்வது நல்லது.
இதனிடையே, கர்நாடகா மாநிலத்தின் தக்ஷிணா கன்னட மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று அப்பகுதி முழுவதும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?