Indian Womens Cricket Team Won Asia Cup T20 Championship : தம்புலா: மகளிருக்கான முதல் ஆசிய டி 20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி தம்புலாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை பந்தாடியது. டாஸில் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி அந்த அணியின் குல் பெரோசா, முனிபா அலி இருவரும் ஓப்பனராக களமிறங்கினர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்து தடுமாற்றத்தை தொடங்கியது. அந்த அணியின் குல் பெரோசா 5 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்து பூஜா பந்துவீச்சில் ஹர்மன்ப்ரீத் கவுரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து அமீன் களமிறங்க, இன்னொரு ஓபனரான முனிபா அலி 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரும் பூஜாவின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் அமீன் 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அலியா ரியாஸ், கேப்டன் நிடா தார் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
பாகிஸ்தானின் பேட்டிங் படுமோசமாக இருக்க, துபா ஹசன், பாத்திமா ஹசன் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்து ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பூஜா, ரேனுகா சிங், ஷ்ரேயங்க படில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
அதன்படி இந்திய அணிக்கு ஓபனர்களாக களமிறங்கிய ஷஃபாலி வெர்மா, ஸ்மிருதி மந்தன இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷஃபாலி வெர்மா 29 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல் ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை பிரகாஷமாக்கினார். இறுதியாக இந்திய அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.
அபாரமாக பந்துவீசி பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டரை துவம்சம் செய்த இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா, ஆட்டநாயகி விருதை வென்றார். இதனையடுத்து 21ம் தேதி UAE மகளிர் அணியை எதிர்கொள்கிறது இந்தியா, அதேநாளில் நேபாள் மகளிர் அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது. இன்றைய போட்டிகளில் மலேஷியா – தாய்லாந்து அணிகளும், இலங்க – வங்கதேசம் அணிகளும் மோதுகின்றன.