Donald Trump: “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” மீண்டு வந்த ட்ரம்ப்... துப்பாக்கிச் சூடு குறித்து ஓபன்

America President Candidate Donald Trump Speech : அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த வாரம் டொனால்ட் ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த ட்ராம்ப், அதுகுறித்து அமெரிக்க மக்கள் முன் மனம் திறந்தார்.

Jul 20, 2024 - 09:50
Jul 20, 2024 - 10:50
 0
Donald Trump: “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” மீண்டு வந்த ட்ரம்ப்... துப்பாக்கிச் சூடு குறித்து ஓபன்
America President Candidate Donald Trump Speech
America President Candidate Donald Trump Speech : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இதனையடுத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் டொனால்ட் ட்ரம்ப்க்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) பென்சில்வோனியாவில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
 
தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டொனால்ட் ட்ரம்ப் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ஆனால், ட்ரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கோரி காம்ப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். ட்ரம்ப்பின் காதை உரசியபடி பாய்ந்து சென்றது புல்லட். இதனால் ட்ரம்ப்பின் காதில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதேபோல் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸும் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு ஜோ பைடன், பாரம் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் குடியரசு கட்சி நடத்திய தேசிய மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் மேடையேறிய ட்ரம்புக்கு அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். அதன்பின்னர் மக்கள் முன் உரை நிகழ்த்திய அவர், இன்னும் நான்கு மாதங்களில் நாம் மிகப் பெரிய வெற்றியை பெறவுள்ளதாகவும், பாதி அமெரிக்கா என்றில்லாமல், முழு தேசத்திற்கும் நான் அதிபராக இருப்பேன் என்றார். மேலும், ஒவ்வொரு மதம், இனம் சார்ந்த குடிமக்களுக்கான பாதுகாப்பு, அவர்களின் சுதந்திரம் என புதிய சகாப்தத்தை ஒன்றாக தொடங்குவோம் என்றும், சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள், பிரிவினையை களைய வேண்டும் எனவும் கூறினார். 

 
இறுதியாக தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் மனம் திறந்தார். அந்த சமயத்தில் கடவுள் என் பக்கம் இருப்பதாக நம்பினேன். துப்பாக்கிச் சூடு நடந்த அந்த நொடியில் நான் தலையை திருப்பாமல் இருந்திருந்தால், இந்நேரம் உயிரோடு உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன். அந்த தோட்டா என் நெற்றிக்கு குறி வைக்கப்பட்டது, ஆனாலும் எனக்கு எதுவும் ஆகவில்லை. அந்த நேரம் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே எனது வலது கையை உயர்த்தினேன் என்றார்.
 
அதேபோல் மக்களாகிய நீங்கள் காட்டிய அன்புக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவனாக இருப்பேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்ததும் “என்ன நடந்தது... என்ன நடந்தது..” என பலரும் என்னிடம் கேட்டார்கள். இப்போது எல்லாம் தெரிந்துவிட்டது, மீண்டும் ஒருமுறை நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். உண்மையாகவே இது மிகவும் வேதனையானது எனக் கூறினார். முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரி கோரிக்கு அஞ்சலி செலுத்தினார் ட்ராம்ப். 
 
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப், காதில் பேண்டேஜ் அணிந்தபடி இந்த மாநாட்டில் பங்கேற்றார். இதனால் ட்ராம்ப்பை உற்சாகப்படுத்தும் விதமாக அவரது ஆதரவாளர்களும் காதில் பேண்டேஜ் அணிந்தபடி மாநாட்டில் பங்கேற்றனர். இந்தச் சம்பவமும் அமெரிக்க தேர்தலில் கவனம் ஈர்த்துள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow