அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Sep 8, 2024 - 17:01
Sep 9, 2024 - 10:56
 0
அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!
Rahul GandhI Visit USA

வாஷிங்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். விமானம் மூலம் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் சார்பில் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த புகைப்படத்தை தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, ''அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னை உற்சாக வரவேற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நுண்ணறிவு உரையாடல்களை மேற்கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். செப்டம்பர் 8ம் தேதி (இன்று) டெக்சாஸில் இருக்கும் ராகுல் காந்தி, 9 மற்றும் 10ம் தேதிகளில் வாஷிங்டனுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்திய வம்சாவளியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக காங்கிரஸ் அயலகப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.

''இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களை சேர்ந்த தொழில்நுட்ப மாணவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக வணிக மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ராகுல் காந்தி உரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். அவரை அமெரிக்காவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்'' என்று சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு மே மாதம் சுமார் 10 நாட்கள்  அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய அவர், பாஜகவை மிக கடுமையாக சாடினார். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்தும் ராகுல் காந்தி பேசினார். இதனால் ஆவேசம் அடைந்த பாஜகவினர், ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow