காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Sep 7, 2024 - 16:07
 0
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!
Israel Attack On Gaza

காஸா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது. 

இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தளபதி முகமது தைஃப் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் ஈரானுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், ''இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்குவோம்'' என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையாக தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காஸா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவில்லை. அதாவது காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹலிமா அல்-சாதியா பள்ளிக்கூடம் மற்றும் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் உயிரிழந்து விட்டதாக காஸாவின் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வான்வெளி மற்றும் தரைவழி மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் காஸாவில் பதற்றம் நிலவி வருகிறது. போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow